தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல்லில் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்.. பல்வேறு அறிவுரைகளுடன் பேணிய அரசு மருத்துவர்கள்! - 3 babies born

Dindigul Government Hospital: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளையும், தாயையும் மருத்துவர்கள் அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி மீட்டுள்ளனர்.

தாயையும், சேயையும் உயிருடன் மீட்டெடுத்த மருத்துவர்கள்
ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2023, 10:23 AM IST

Updated : Nov 25, 2023, 11:20 AM IST

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சிலப்பாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் சசி - ரிஷா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், கர்ப்பமாக இருக்கும் ரிஷா, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மாதாந்திர பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார். மருத்துவர்கள் ரிசாவிற்கு தைராய்டு இருப்பதாகவும், அதேபோல் மூன்று குழந்தைகள் கருத்தரித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மகப்பேறு பிரசவத்திற்காக ரிசாவை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு இருப்பதனை அறிந்த மருத்துவர்கள், கடந்த அக்டோபர் 21ஆம் தேதி உடனடியாக மகப்பேறு சிகிச்சை அளித்து, அறுவை சிகிச்சை மூலம் மூன்று குழந்தைகளையும் உயிருடன் மீட்டுள்ளனர்.

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளும், சாதாரணமாக குழந்தைகள் இருக்கும் எடையை விட மிகவும் குறைந்த அளவில் இருந்துள்ளனர். ஒரு கிலோ 250 கிராம், ஒரு கிலோ 50 கிராம், ஒரு கிலோ 300 கிராம் என்ற விகிதத்தில் குழந்தைகள் இருந்துள்ளனர். இதனால் மூன்று குழந்தைகளையும், குழந்தைகள் நல மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து, செயற்கை சுவாசம் மற்றும் நுரையீரல் வளர்ச்சி ஆகிய சிகிச்சைகள் அளித்து பாதுகாத்துள்ளனர்.

மேலும், குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இருக்கக்கூடிய செவித்திறன் மற்றும் இதய நோய், மூளை பாதிப்பு ஆகிய பரிசோதனைகள் போன்றவை செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, குழந்தைகளின் எடையை அதிகரிக்க, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் தாய்ப்பால் வங்கி மூலம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கியுள்ளனர்.

தொடர்ந்து, குழந்தையை எவ்வாறு பராமரிக்க வேண்டும், குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எவ்வாறு எடையை அதிகரிக்க வேண்டும், குழந்தைக்கு நோய்த்தொற்று வராமல் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து ரிசாவிற்கு மருத்துவர்கள் அறிவுரைகளை வழங்கி உள்ளனர். குறைந்த எடையில் பிறந்த மூன்று குழந்தைகளும் கிட்டத்தட்ட 35 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து, மருத்துவர்கள் அவர்களை கண்காணித்து வந்துள்ளனர்.

அதேபோல், குழந்தைகளின் எடை அதிகரிக்க, கங்காரு பராமரிப்பு முறை மூலமாக குழந்தையைப் பராமரிப்பது மற்றும் தாய்ப்பால் வழங்குவது போன்றவற்றை மருத்துவர்கள் வழங்கியுள்ளனர். தற்போது மூன்று குழந்தைகளும் ஆரோக்கிய நிலைக்கு வந்துள்ளனர்.

இது குறித்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாவது, “அரசு மருத்துவமனையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இது போன்று தனியாக பிரிவை ஏற்படுத்தி, குறைமாதம் மற்றும் குறைந்த எடைகளில் பிறக்கும் குழந்தைகளைப் பராமரித்து வருகிறோம். அதேபோல் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், தாய்மார்களுக்கும் பிரத்யேகமாக அறைகள் ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன” என தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, குழந்தைகளின் பெற்றோர் கூறியதாவது, “குழந்தைகள் கருத்தரித்த நாள் முதலே தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை மேற்கொண்டு வந்தோம். பிரசவத்திற்காக மகப்பேறு அரசு மருத்துவமனையில் அனுமதித்த பொழுது, எங்களின் குழந்தைகளை 35 நாட்களுக்கு மேலாக எங்களை விட அதிகமாக, தாயைப் போல குழந்தைகளை மருத்துவர்கள் பார்த்துக் கொண்டனர். அதேபோல், தாய்ப்பால் பற்றாத நேரங்களில், தாய்ப்பால் வங்கியில் இருந்து தாய்ப்பால் பெற்று குழந்தைகளுக்கு வழங்கியுள்ளனர். தேவையான ஊட்டச்சத்து பெறும் அளவிற்கு, குழந்தைகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்” என கூறினர்.

இதையும் படிங்க:புதுமணத் தம்பதியினரின் புது வித முயற்சி.. ஈரோட்டில் நெகிழ்ச்சி சம்பவம்!

Last Updated : Nov 25, 2023, 11:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details