திண்டுக்கல் மாவட்டம். வேடசந்தூர் அடுத்த ஆர்.வெள்ளோட்டு கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில், உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமையில், அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதாக செய்தியாளர்களுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தனியார் திருமண மண்டபத்திற்கு செய்தி சேகரிக்க சென்றனர்.
மண்டபத்தில் பணம் பட்டுவாடா; செய்தியாளர் மீது அதிமுகவினர் தாக்குதல் - அதிமுக தொண்டர்கள்
திண்டுக்கல்: அமைச்சர் தலைமையில் அதிமுகவினர் ரகசியமாக நடத்திய கூட்டத்துக்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை அதிமுகவினர் தாக்கியதால் சலசலப்பு ஏற்பட்டது.
அப்போது செய்தியாளர்கள் மண்டபத்திற்கு உள்ளே செல்ல முயன்றபோது அதிமுகவினர் தாக்கினர். இதில் தினகரன் நாளிதழின் நிருபர் படுகாயமடைந்தார். மேலும் அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் கேமரா உடைக்கப்பட்டன. சக செய்தியாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு அனைத்தும் தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் கண்முன்பே நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நடைமுறை விதிகள் அமலில் இருக்கும்போது இரண்டு அமைச்சர்களின் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களை வைத்து கூட்டத்தை நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.