திண்டுக்கல்: தேனி மாவட்டம், பெரியகுளம் கைலாசப்பட்டி கோயில் பூசாரியாக நாகமுத்து என்பவர் பல ஆண்டுகளாக இருந்து வந்தார். இந்நிலையில் அவர், கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 8 அன்று தற்கொலை செய்து உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, பூசாரியை தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறி அப்போதைய பெரியகுளம் நகராட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியுமான ஓ.ராஜா, மணிமாறன், லோகு, சிவகுமார், ஞானம், சரவணன் மற்றும் பாண்டி உள்பட 7 பேர் மீது பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அந்த வகையில், இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக அரசுத் தரப்பில் 5 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் ஐந்து பேரையும் மீண்டும் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என ஓ.ராஜா தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.