திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கோவிலூரில் சண்முகம் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். சண்முகம் சொந்த பணியின் காரணமாக வெளியூர் சென்ற நிலையில், அவரது மனைவி எழிலரசி மளிகை கடையை கவனித்து வந்தார். இதனை நோட்டமிட்ட முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள், கோவிலூர் அருகே ரோஜா நகரில் உள்ள எழிலரசி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர்.
இதனைப் பார்த்த பக்கத்து வீட்டுக்கார பெண் மகாலட்சுமி, உடனடியாக எழிலரசிக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து பதறியடித்தபடி வீட்டிற்கு வந்த எழிலரசி கொள்ளையர்களை பார்த்து நீங்கள் யார் என்று கேட்டுள்ளார். முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கத்தியை காட்டி, கூச்சலிட்டால் கொன்று விடுவதாக எழிலரசியை மிரட்டியுள்ளனர். இதனையடுத்து, வீட்டினுள் இருந்த பொருள்களை எடுத்துச் செல்ல முயற்சி செய்தபோது, பக்கத்து வீட்டு பெண் மகாலட்சுமி தடுக்க முயன்றுள்ளார். அவரிடமும் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையர்கள் இருவரும் தப்பித்துச் சென்றனர்.