திண்டுக்கல்: பழனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு உள்ள 7-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கீழ் வடம் போக்கி தெருவில் நகராட்சி சார்பில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் சாலை அமைக்கும் பகுதியில் உள்ள அடிகுழாய் ஒன்றையும் சேர்த்து தார்சாலை அமைத்து மூடியதால் தண்ணீர் பிடிக்க முடியாமல் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து கூறி அப்பகுதி மக்கள் "நல்ல நிலையில் செயல்பட்டு வரும் அடிகுழாயை மூடி தார்சாலை அமைத்துள்ளதால், தண்ணீர் பிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. 7வது வார்டு கவுன்சிலராக திமுகவை சேர்ந்த சுரேஷ் என்பவர் உள்ளார். தார்சாலை அமைக்கும் போது பழைய சாலையை அகற்றி எடுத்துவிட்டு புதியசாலை அமைக்காமல், அதன் மீதே சாலை அமைத்துள்ளதாகவும், தார்சாலை அமைக்கும் போது, நல்ல நிலையில் செயல்பட்டுவரும் அடிகுழாயை மூடி தார்சாலை அமைக்கலாமா? என்ற அடிப்படை யோசனைகூட இல்லாமல் வார்டு கவுன்சிலர் ஆரம்பித்து சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் வரை யாருமே இதை கண்டுகொள்ளாமல் இருந்தது எப்படி?" என கேள்வி எழுப்பியுள்ளனர்.