கிராம சபை அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம் திண்டுக்கல்: கொடைக்கானல் பகுதியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வில்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு துறையின் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அண்ணா ராமசாமி நகர், திருவள்ளுவர் நகர், சின்ன பள்ளம், பெரும்பள்ளம், குருசடி மெத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் குப்பைத்தொட்டிகள் முறையாக இல்லை எனவும்; முறையாக குப்பைகள் தள்ளப்படுவதில்லை எனவும் தெரிவித்தனர்.
மேலும், பட்டா உள்ளிட்டவற்றுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும்; இதுவரை பட்டா வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர். சாலை வசதி அமைத்தால் முறையாக அமைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் தெரிவித்தனர். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை உடனடியாக சரிசெய்து விட வேண்டுமென கோரிக்கை மனுவாக அளித்தனர்.
இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில்லை எனக் கூறி கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் என் பச்சை பேனா வேலை செய்யும் - எம்.பி. கதிர் ஆனந்த் எச்சரிக்கை