திண்டுக்கல் மாவட்டம், குட்டத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி பொன்னம்மாள். இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக குட்டத்துப்பட்டி கிராமத்தில் உள்ள தங்களது நிலத்திற்குப் பட்டா கேட்டு அலைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே பட்டா கேட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர்.
ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர், இவர்களுக்கு பட்டா பெயரை மாற்றித் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் அலைக்கழித்துள்ளார்.
இதனால், மிகுந்த மன வேதனைக்கு உள்ளான தம்பதியினர், தங்களை கருணைக் கொலை செய்திட மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்க வேண்டும் எனக் கூறி குடும்பத்தோடு மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
இதுகுறித்து பொன்னம்மாள் கூறுகையில், "எனது கணவர் கடந்த 3 மாத காலமாக பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருடைய மருத்துவச் செலவிற்கு அன்றாடம் பணம் இன்றி தவித்து வருகிறோம். நாங்கள் நில பட்டாவிற்காக கிராம நிர்வாக அலுவலரிடம் ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் அளித்தும்; அவர் பட்டா வழங்காமல் ஏமாற்றி வருகிறார்.
இதுதொடர்பாக இரண்டு ஆண்டுகளாக வட்டாட்சியர் அலுவலகம், ஆட்சியர் அலுவலகம் என அலைந்தும் எந்த ஒரு பயனும் இல்லை. ஆகையால், இனி நாங்கள் வாழ்வதைவிட கருணைக் கொலை செய்து கொள்ள அனுமதித்தால், எங்கள் துயரம் ஒரு முடிவுக்கு வரும் என்பதால், ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்"என்றார்.
இதையும் படிங்க:அமைச்சரின் பாதுகாவலர் கொலை மிரட்டல்: ஊராட்சி மன்ற தலைவர் புகார்!