Palani Thaipusam Festival:பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் திண்டுக்கல்அருகேஅறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத்திருவிழா(Palani Thaipusam Festival) கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. பழனி ஊர்க்கோவில் என அழைக்கப்படும் பெரியநாயகியம்மன் கோயிலில் காலை 9.30 மணியளவில் கோயில் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதுமிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூசத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வரும் 6-ம் நாள் திருவிழாவான பிப்ரவரி 3-ம் தேதி மாலை நடைபெறுகிறது.
தொடர்ந்து அன்று இரவு நான்கு ரதவீதிகளில் வெள்ளித்தேரோட்டமும், பிப்ரவரி 4-ம் தேதி முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டமும் நடைபெறுகிறது. இன்று முதல் தினமும் அருள்மிகு முத்துக்குமாரசாமி வள்ளி, தெய்வானை சமேதராக தங்கமயில், வெள்ளி மயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
பின்னர், கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் சந்திரமோகன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், இணை ஆணையர் நடராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர். வருகிற பிப்ரவரி 7-ம் தேதி இரவு தெப்பத்தேரும், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத் திருவிழாவும் நிறைவடைய உள்ளது. தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காக பழனி திருக்கோயில் நிர்வாகம் மற்றும் பழனி நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க:ரதசப்தமியையொட்டி அண்ணாமலையார் கலசப்பாக்கத்தில் தீர்த்தவாரி