தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தைப்பூசத் திருவிழா: பழனியில் கோயிலில் கொடியேற்றத்துடன் துவக்கம்!

Thaipusam Festival: பழனி முருகன் கோயிலில் சுமார் 10 நாட்கள் நடைபெறும் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.

Thaipusam Festival
தைப்பூசத் திருவிழா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2024, 10:50 AM IST

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் 'தைப்பூசத் திருவிழா' இன்று (ஜன.19) காலையில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதாவது, பழனி ஊர்க்கோயில் என அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் காலை‌ 8.30 மணியளவில் கோயில் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். மேலும், தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 6ஆம் நாள் திருவிழாவாக ஜனவரி 24ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து, அன்றிரவு நான்கு ரதவீதிகளில் வெள்ளி ரத தேரோட்டமும், ஜனவரி 25ஆம் தேதி முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டமும் நடைபெறுகிறது.

அதனை முன்னிட்டு, முருகபெருமான் இன்று முதல் தினமும் தங்கமயில், வெள்ளிமயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். மேலும் இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோயில் அறங்காவலர், குழு தலைவர்கள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், இணைஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, உள்ளூர் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தற்போது வருகிற 28ம் தேதி இரவு தெப்பத்தேரும், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத் திருவிழா நிறைவடைய உள்ளது. இந்த தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காக, பழனி கோயில் நிர்வாகம் மற்றும் பழனி நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் கோயில் வரும் பிரதமர் மோடி; 2 நாட்களுக்கு பொது தரிசனம் செய்ய தடை..!

ABOUT THE AUTHOR

...view details