பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா, கடந்த 2ஆம் தேதி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் வள்ளி-தெய்வானையோடு முத்துக்குமாரசுவாமி யானை தந்தப் பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக் காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார்.
தைப்பூசத் தேரோட்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெய்வத் திருக்கல்யாணம், மலை அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் இன்று மாலை 4.30 மணி அளவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி ரத வீதிகளில் உலா வந்தபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர்.
முன்னதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் IP செந்தில்குமார் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
தைப்பூச திருவிழாவில் கலந்துகொள்ள தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிக்கு வந்துள்ளனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரையாகவும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். பழனி இடும்பன்குளத்தில் புனித நீராடிய பக்தர்கள், மலை அடிவாரத்தில் பால் காவடி, மலர் காவடி, மயில் காவடி, இளநீர் காவடி என பலவகையான காவடிகளை சுமந்தபடி ஆடியும், முருகனை பற்றய பாடல்களை பாடியும், அரோகரா கோஷம் எழுப்பியபடி கோயிலை வலம் வந்தனர்.