திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள குஜிலியம்பாறையில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியில் உள்ளிக்கோட்டை, பாளையம், கரிகாலி, லந்தகோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு அரசு ஆதிதிராவிடர் விடுதி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த விடுதியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், மிகவும் பழைய விடுதி கட்டடம் என்பதால் சிதிலமடைந்து எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உடைந்து விடலாம் எனும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதன் காரணமாக, விடுதி நிர்வாகம் மாற்று ஏற்பாடாக மூன்று நேரமும் உணவுகள் மட்டும் கொடுத்துவிட்டு இரவில் தங்க வைக்காமல் மாணவர்களை பாதுகாப்பாக நண்பர்கள் வீட்டிற்கும், சொந்த வீட்டிற்கும் அனுப்பி விடுகின்றனர். இதனால், தங்களின் கல்வியில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இடிந்து விழும் நிலையிலுள்ள அரசு விடுதி சென்னை மவுலிவாக்கத்தில் கட்டடம் இடிந்து தரைமட்டமானது போல் இங்கும் அப்படி சம்பவம் நடந்துவிடுமோ என இப்பகுதி மக்களும் மிகவும் அச்சத்துடன் இருக்கின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள் தலையிட்டு சிதிலமடைந்துள்ள விடுதி கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:நீங்கள் செய்த குற்றம் என்ன? முகம் பார்த்து ஜாதகம் சொல்லும் கிளி!