திண்டுக்கல் மாவட்டம், காசம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஆசிரியர் சுரேஷ். மதுரை மாவட்டம், பொதும்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் ஆசிரியராக இவர் பணியாற்றி வருகிறார். ஆசிரியர் பணியோடு தனது குடும்ப பாரம்பரியத் தொழிலான மா விவசாயத்தையும் இவர் மேற்கொண்டு வருகிறார். ஒருபுறம் ஆசிரியர் பணி, மற்றொரு புறம் விவசாயம் என இவ்விரண்டையும் மன மகிழ்ச்சியோடு செய்து வருகிறார் சுரேஷ்.
விவசாயம் -மன நிம்மதி
இது குறித்து ஆசிரியரும் விவசாயியுமான சுரேஷ் கூறுகையில், "எனது தந்தை மதுரையில் காவலராக பணிபுரிந்தவர். காசம்பட்டி கிராமம் எங்களுக்கு பூர்வீகம். ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தந்தை எங்களை கிராமத்திற்கு அழைத்து வந்துவிடுவார். பொதுவாக, திண்டுக்கல் மாவட்ட எல்லைக்கு உள்பட்ட பரளி, நத்தம் பகுதிகளில் மா விவசாயம் அதிகம் செய்வார்கள். இப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பல்வேறு வகையான மா வகைகள் விளைகின்றன. கல்லாமை, பங்கனபள்ளி, பாலாமணி வகைகள் அதிகம் விளையும்.
விவசாயப் பணி எனக்கு மிகுந்த மன நிம்மதி தருகின்ற ஒன்றாகும். 25 ஏக்கர் நிலத்தில் மா விவசாயம் செய்கிறேன். ஆசிரியர் பணி, விவசாயப் பணி இரண்டையுமே நான் எப்போதும் சுமையாகக் கருதியதில்லை. இரண்டுமே இங்கு அவசியம். எனது வாழ்வியலாக நான் இவற்றை மாற்றிக்கொண்டேன். என்னுடைய மாணவர்களுக்கும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை கூறுவேன். விவசாயத்தை எனது தாயாரும், மனைவியும் மிகப் பொறுப்போடு கவனித்துக் கொள்கிறார்கள். என் தந்தை எனக்கு செய்தார்கள், நான் இப்போது என் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து வருகிறேன். எனக்குப் பிறகு என் பிள்ளைகள் இதைத் தொடர்வார்கள்" என்கிறார் மிகுந்த நம்பிக்கையோடு.