தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Dindigul:சுற்றுச்சூழலை காக்க விதையுடன் கூடிய 'பேப்பர் பேனா'... அசத்தும் திண்டுக்கல் இளைஞர்! - பேப்பர் பேனா sivapalan

சுற்றுச்சூழை சீரழிக்கும் பிளாஸ்டிக்கை தவிர்க்க, விதைகளுடன் கூடிய 'பேப்பர் பேனா'-வை தயாரித்து அசத்தி வரும் திண்டுக்கல் இளைஞரின் மகத்தான முயற்சி குறித்து இந்த செய்தித் தொகுப்பு அலசுகிறது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 17, 2023, 7:49 PM IST

Dindigul:சுற்றுச்சூழலை காக்க விதையுடன் கூடிய 'பேப்பர் பேனா'... அசத்தும் திண்டுக்கல் இளைஞர்!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர், சிவபாலன். இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்து முடித்துள்ளார். மெக்கானிக்கல் இன்ஜினியரான இவர் டிப்ளோமா படித்து முடித்துவுடன் என்ன செய்வதென்று தெரியமால் இருந்தபோது, அவருக்கு ஏதெனும் சிறுதொழில் செய்யலாம் என்ற ஆர்வம் துளிர்விட்டுள்ளது.

பிறகு என்ன தொழில் செய்யலாம் என்றும்; அதற்கான முதலீட்டுக்கு என்ன செய்வதென்றும் யோசித்த சிவபாலன், அரசாங்கம் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவது நினைவுக்கு வந்துள்ளது. வறுமையான குடும்பச் சூழலில் தவித்த போதும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 'பேப்பர் பேனா' தயாரிக்கலாமே என்ற எண்ணம் சிவபாலனுக்கு எழுந்தது.

இதற்காக, மாவட்ட தொழில் மையத்தின் உதவியுடன் கடன் பெற்று பேப்பர் பேனா தயாரிக்கும் தொழிலை வெற்றியுடன் துவக்கியுள்ளார். தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களைக் கொண்டே இந்த பேப்பர் பேனா தயாரிக்கும் பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நமது ''ஈடிவி பாரத் தமிழ்நாடு'' ஊடகத்திடம் பேசிய சிவபாலன், "சுயமாக தொழில் தொடங்க எண்ணியபோது, எக்கோ ஃப்ரெண்ட்லி (Eco friendly) பொருட்களை தயாரிக்கலாமே என்ற நோக்கத்தில் இயற்கை வளத்தை மேம்படுத்த இது போன்ற பொருட்களை தயாரிக்க ஆசை வந்தது. ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு அதிகளவில் பாதிப்பு உள்ளது.

அதிலும் பால்பாய்ண்ட் பேனாக்கள் மக்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தப்பட்டு, தூக்கி எறியப்படுபவையாக உள்ளன. அதனால், இதற்கு மாற்றாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பேப்பர் பேனா தயாரிக்கும் பணியில் ஈடுபட எண்ணினேன்.

எனவே, பேப்பர் பேனா தயாரிக்கலாம் என்ற யோசனை வந்ததது. ஏனென்றால் பிளாஸ்டிக் பொருட்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், நம் அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக்கை உபயோகித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதை எப்படி குறைக்கலாம், யார் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என சிந்தித்ததில் பள்ளி குழந்தைகள் மூலம் கொண்டு செல்லலாம் எனத் தோன்றியது.

பள்ளி மாணவர்கள் அதிகம் உபயோகிக்கும் பொருள் பிளாஸ்டிக் பேனா, பால்பாயிண்ட் பேனா. இதில் மாற்றம் கொண்டு வரலாம் என்ற நோக்கத்தில் இந்த எக்கோ ஃப்ரெண்ட்லி பேப்பர் பேனா தயாரிக்கின்றோம். இது மட்டுமின்றி மரங்களை நடவும், பேனாக்களின் அடிப்புறத்தில் விதைகள் வைத்து தயாரிக்கின்றோம்.

இதனால் வாரத்திற்கு ஒரு பேனா விதம், மாதத்திற்கு 4 பேனாக்கள் உபயோகிக்கின்றனர். இதனால் பிளாஸ்டிக் பொருட்களும் குறைகிறது, கூடவே அதை உபயோகித்துவிட்டு தூக்கி எரியும் போது, ஒரு நபர் மாதத்திற்கு 4 மரம் நடுவது போல் ஆகிவிடும். இதனால், வருடத்திற்கு எத்தனையோ பல மரங்கள் நடப்படும். ஆகையால், இதுமூலம் ஒவ்வொரு பள்ளி மாணவர்களும் மரங்களை நடலாம். தற்போது இதை தயாரித்து முதற்கட்டமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கி வருகின்றோம்.

மேலும், இந்த பேனா 99.5 சதவீதம் பிளாஸ்டிக் இல்லாதது. பேப்பர் பேனா பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்தாலும் அது மட்கிவிடும். இதன் சிறப்பம்சமாக, பேப்பர் பேனாவின் பின்புறம் மாத்திரை குமிழியில் விதைகளை வைக்கிறோம். பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்தாலும் இந்த விதை முளைப்புதிறன் பெற்று செடியாகி, மரமாக வளர்த்துவிடும்.

இதற்காக இலவம் பஞ்சு, கூவா புல், அரளி, பூவரசம் உள்ளிட்ட காட்டு மரங்களின் சிறிய விதைகளை பேப்பர் பேனாவின் பின்புறத்தில் வைக்கிறோம். வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப பேப்பர் பேனாவில் வாசகங்கள் பிரிண்ட் செய்து தருகிறோம்.

மேலும் பிறந்தநாள், திருமண விழாக்களுக்கு பரிசுப்பொருட்களாக ஆர்டர் தருபவர்களுக்கு பெயர் பிரிண்ட் செய்து பேப்பர் பேனா தயாரித்து தருகிறோம். ஒரு சாதாரண பேப்பர் பேனாவின் விலை ரூ.5 எனவும், வாழ்த்துகள் பிரிண்ட் செய்யப்பட்ட பேனா ரூ.10 எனவும் விற்பனை செய்கிறோம்.

அதேபோல், ஆன்லைன் மூலம் விற்பனை, பள்ளிகளை நேரடியாக தொடர்புகொண்டும் விற்பனை செய்து வருகின்றோம். இந்த பேப்பர் பேனா மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு தவிர்க்கப்படுவதுடன், அதில் இருக்கும் விதை மூலம் இயற்கை வளத்தையும் அதிகரிக்க முடியும்" என்று தெரிவித்தார்.

எத்தனையோ, விதவிதமான சிறு தொழில்கள் இருப்பினும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், எதிர்கால தலைமுறைக்கு மரம் வளர்த்தலின் அருமையை உணர்த்தும் சிவபாலனுக்கு ஈடிவி பாரத் பாராட்டுக்களை கூறுவதில் பெருமை அடைகிறது.

இதையும் படிங்க: நீட் தேர்வில் சாதனை புரிந்த சேலம் மாணவர்கள்! சிறப்பு பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details