திண்டுக்கல்:கொடைக்கானல் அருகே பாச்சலூர் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சக்தி என்பவரது மகள் பிரித்திகா ஐந்தாம் வகுப்பு படித்துவந்துள்ளார். இந்த நிலையில் அவருடைய சகோதரி தர்ஷினி மதிய உணவு வேளையின்போது அவரைக் காணவில்லை எனத் தேடிவந்துள்ளார். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அப்பகுதி முழுவதும் மாணவியை பள்ளி நிர்வாகம் தேடியுள்ளனர். இந்நிலையில், பள்ளியின் சமையலறை அருகில் மாணவி உடல் கருகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் கொடைக்கானல் தாண்டிக்குடி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
பின்னர், உடனே மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், மாணவி செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.