திண்டுக்கல்: பழனியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலருமான சசிகாந்த் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”நாட்டில் கடந்த சில நாள்களாகப் பரபரப்பாகப் பேசப்பட்டுவரக்கூடிய பொருளாக இருந்துவருகிறது முக்கியப் பிரபலங்களின் செல்போன் அழைப்புகள் ஒட்டுக்கேட்ட விவகாரம். ஒன்றிய அரசு முக்கியப் பிரபலங்களின் செல்போன் அழைப்புகளை ஒட்டுக்கேட்டு அதன்மூலம் மிரட்டிவருகிறது.
உதாரணமாக நீதிபதி ரஞ்சன் கோகாய் பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வழங்கியவர். ஓய்வுபெற்ற சில மாதங்களில் ஒன்றிய அரசு அவருக்கு நியமன எம்பி பதவி வழங்கியுள்ளது. தற்போது ஒன்றிய அரசு ஒட்டுகேட்டதாக வெளியாகியுள்ள செல்போன் அழைப்புகள் பட்டியலில் ரஞ்சன் கோகாயுடைய செல்போன் அழைப்பு இல்லை.
பின்புலமாக ஒன்றிய அரசு
ஆனால் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்த பெண்மணியினுடைய செல்போன் அழைப்பு, அவருடைய உறவினர்களின் செல்போன் அழைப்புகள் உள்ளது தெரியவந்துள்ளது. இதன்மூலம் ஆதாயம் அடைந்தவர்கள் யார் என்பதைப் பார்க்கும்போது அதன் பின்புலமாக ஒன்றிய அரசு உள்ளது தெரியவருகிறது.