திண்டுக்கல்: ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (நவ.14) காலை 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், பழனி நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்காக நகராட்சி நிர்வாகம், தனியார் நிறுவனத்திடம் இருந்து பணியாளர்களைப் பெற்று, தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகிறது. பழனி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்த அடிப்படையில் நாள்தோறும், நூறு தூய்மைப் பணியாளர்களை பணிக்கு அனுப்பி வருகிறது. இதில் ஒப்பந்த அடிப்படையில், பழனியில் தூய்மைப் பணியை மேற்கொண்டு வந்த பணியாளர்கள், தங்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தின்படி சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்காமல் காலதாமதம் செய்து சம்பளம் வழங்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர்.