திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு குழாம் இரண்டு உள்ளது. இங்கு படகு ஓட்டுநர்கள் 40 பேர் பணிபுரிகின்றனர்.
இவர்களுக்கு சென்ற இரண்டு நாள்களாக பாதுகாப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அதில் படகில் செல்லும்போது சுற்றுலா பயணிகள் தவறி தண்ணீரில் விழுந்தால் அவர்களை எப்படி காப்பாற்றுவது, பாதுகாப்பான முறையில் எப்படி படகுகளை இயக்குவது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
படகு குழாம் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு பயிற்சிகள் இந்தப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை கொடைக்கானல் சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர் பூபாலன் செய்திருந்தார். இந்தப் பயிற்சியினை இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிக்கல் சயின்ஸ் அண்ட் வாட்டர் ஸ்போர்ட்ஸ் அமைப்பின் தலைமை பயிற்சியாளர் டாம் ஜோசப், தொழில்நுட்ப இயக்குனர் வினோத் ஆகியோர் அளித்தனர்.
இதுகுறித்து தொழில்நுட்ப இயக்குனர் வினோத் கூறுகையில், " தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு குழாம் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. சென்ற இரண்டு நாள்களாக அவர்களுக்கு எழுத்துப்பயிற்சி, ஏரியில் செயல்முறை பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன"எனக் கூறினார்.
இதையும் படிங்க: நாகையில் ஆயுதப்படை காவலர்களுக்கு பேரிடர் கால மீட்பு பயிற்சி