திண்டுக்கல்:கோபால்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சக்கிலியான் கொடையைச் சேர்ந்தவர், கண்ணன் (55). விவசாயியான இவர் மாடுகள் வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் நேற்று முன் தினம் (மே.15) உடலில் பலத்தக் காயங்களுடன் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் சடலமாக தூக்கில் இருந்து மீட்கப்பட்டார்.
அதைப் பார்த்த அப்பகுதியினர் பதறி, இச்சம்பவம் குறித்து உடனடியாக சாணார்பட்டி போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். பின் அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், கண்ணனின் உடலைக் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், கண்ணன் மரணத்தில் சந்தேகம் இருந்ததால், எப்படி இறந்தார்? யார் இதை செய்தது? கொலையா.. தற்கொலையா? இச்சம்பவத்தின் பின்னணி என்ன? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்குக் கிடைத்துள்ளன. அதாவது அவரது நெருங்கிய உறவினர்களிடையே கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி சொத்துப் பிரச்னை நிகழ்ந்து வந்தது தெரிவந்தது. பின் அந்த தகவலின் பேரில், அவரது உறவினர்கள் அனைவரையும் அழைத்து போலீசார் விசாரணை செய்தனர். ஆரம்ப கட்டத்தில், தங்களுக்கு எதுவும் தெரியாது என மறுத்துள்ளனர். ஆனால் போலீசாருக்கு சந்தேகம் தீராததால் தீவிர விசாரணை செய்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் சமாளிக்க முடியாமல் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.
அதாவது அந்த விசாரணையில், சொத்துத் தகராறில் கடந்த 6 மாதங்களாக அடிக்கடி வாய்த் தகராறு நிகழ்ந்துள்ளதாகவும், ஒரு கட்டத்தில் குடும்பத்துடன் கொலை செய்யத் திட்டமிட்டு கல்லால் அடித்து கொடூரமாக படுகொலையும் செய்துள்ளனர். அதனை மறைத்து, அவர் தற்கொலை செய்தது போல பிம்பப்படுத்த தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தது போல தொங்க விட்டுள்ளனர்.