தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திண்டுக்கல், நீலகிரி, தேனி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் அதி தீவிர கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திண்டுக்கல்லில் 84 பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த 84 பகுதிகளுக்கும் மாவட்டதுணைஆட்சியர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு, பாதிக்கப்படும் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் உள்ள கால்நடைகளை பாதுகாத்திட 67 கால்நடை மருத்துவர்கள், 18 பாம்புபிடி வீரர்கள், மரங்களை அகற்ற 185 தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டு வெள்ள காலங்களில் துரிதமாக செயல்பட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.