திண்டுக்கல்: பழனி அருகே சிவகிரிப்பட்டி ஊராட்சியில் இடும்பன் குளம் உள்ளது. புனித தீர்த்தமாக விளங்கும் இடும்பன் குளத்தில் பக்தர்கள் புனிதநீராடி பழனி கோயிலுக்குச்சென்று முருகனை வழிபடுவது வழக்கம். மேலும் இடும்பன் குளத்தின் நீர் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் பக்தர்கள் வீசும் பொருள்கள் மற்றும் துணிகளாலும், சமூகவிரோதிகள் மது அருந்திவிட்டு வீசும் பாட்டில்களாலும் இடும்பன் குளமானது மாசடைந்து உள்ளது. எனவே இடும்பன் குளத்தை சுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, பழனி கோட்டாட்சியர் சிவக்குமார் கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டார்.
அதில், மாசடைந்துள்ள இடும்பன் குளத்தை சுத்தம் செய்து கழிவுகளையும் குப்பைகளையும் வெளியேற்ற பழனி வாழ் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆர்வமுள்ளவர்கள் முன்கூட்டியே தெரிவிக்குமாறும் அறிவித்தார்.
இதன்படி இன்று (ஜூலை 16) காலை இடும்பன் குளத்தை சுத்தம் செய்யும் பணிக்காக பழனி கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் இடும்பன் குளத்திற்கு வருகை தந்தனர். இடும்பன் குளத்தைச் சுத்தம் செய்வதற்காக பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தபோதும் யாருமே வரவில்லை. இதனால் அப்பகுதி வெறிச்சோடி இருந்தது.