கரோனா பெருந்தொற்று பாதிப்பின் காரணமாக மார்ச் 25ஆம் தேதி இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து தொடர்ந்து கொண்டே வரும் ஊரடங்கு உத்தரவு அக்டோபர் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
தொடர் ஊரடங்கு உத்தரவின் காரணமாக காய்கறி, பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடும் ஏற்றமடைந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் சிரமம் நியாயவிலைக் கடைகளில் கிடைக்கும் பொருட்களை மட்டுமே வாங்கும் நிலைக்கு ஏழை எளிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்தபாடில்லை.
விலை உயர்வு, கரோனா அச்சம் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் காய்கறி வாங்க தயக்கம் காட்டுவதாக கூறுகிறார் காய்கறி விற்பனையாளர் பூமிநாதன், "திண்டுக்கல் உழவர் சந்தையில் கேரட், பீட்ரூட், கிழங்கு என 15 வகையான காய்கறிகளை விற்பனை செய்து வருகிறேன். ஊரடங்கிற்கு முந்தைய காலங்களில் வியாபாரம் மிக நன்றாக இருந்தது.
கரோனா காலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் காய்கறிகளின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது அரசு ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்த பிறகும் சந்தைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் காய்கறி வியாபாரம் மிக மோசமாக உள்ளது" என்று கூறினார்.
மாற்று வேலை தெரியாததால் விற்பனை இல்லை என்றாலும் காய்கறி வியாபாரம் செய்கிறேன் என்கிறார் விற்பனையாளர் ஆண்டாள், "கரோனாவால் காய்கறி வியாபாரம் சுத்தமாக இல்லை. மேலும் போக்குவரத்து வசதி இல்லாததாலும், காய்கறி விலை உயர்வாலும் பொதுமக்கள் சந்தைகளுக்கு வராமல் உள்ளனர்" என்றார்.
காய்கறி விலை உயர்வுக்கு பயப்படுவதா? அல்லது கரோனாவிற்கு பயப்படுவதா? என தெரியவில்லை என்று தெரிவித்தார் குடும்பத்தலைவி ராணி, "ஆறு மாதமாக வேலையில்லை. ஆனால் அந்த ஆறு மாதமும் சாப்பாடு தேவை இருந்தது. இதனால் வேறு வேலைக்கு செல்லலாம் என நினைத்தாலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வேலையின்மை, விலை உயர்வு இரண்டிற்கும் மத்தியில் கஷ்டப்படுகிறோம். ஆகவே அரசு காய்கறி விலையை கட்டுப்படுத்த வேண்டும்" என தெரிவித்தார்.
கரோனாவிற்கு முன்பு 50 ரூபாய்க்கு காய்கறிகள் வாங்கிடலாம். இப்போது வெங்காயம் கூட வாங்க முடியவில்லை என வருத்தத்தோடு பேசினார் மற்றொரு குடும்பத்தலைவி வனஜா, "கரோனா ஊரடங்கால் கணவர் குழந்தைகளுடன் வீட்டிலேயே உள்ளேன். இதனால் நான்கு ஐந்து வேளை சமைக்க வேண்டியுள்ளது. இப்படி இருக்கும் நிலையில், காய்கறிகள் விலை உயர்வு வேதனை அளிக்கிறது. எனவே அரசு இதில் தலையிட்டு காய்கறிகள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: கரோனாவால் அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோ ஓட்டுநர்கள்