கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக வாரந்தோறும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுவந்த மக்கள் குறைதீர் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது ஊரடங்கு உத்தரவு தளர்வு, பொதுமக்களின் நலன்கருதி செப்டம்பர் 21ஆம் தேதி முதல் நிபந்தனைகளுடன் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "காலை 10 மணி முதல் மதியம் 1.30 வரை வாரந்தோறும் திங்கள்கிழமை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.
இந்தக் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதில் 10 வயதுக்கு குறைவான குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அனுமதி கிடையாது.
அதேபோல் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்வதை தவிர்த்து, அவர்களது உறவினர்கள், தன்னார்வலர்கள் மனு அளிக்கலாம். தொடர்ந்து அதிகளவு கூட்டம் சேருவதை தடுத்திட போதுமான முன்னேற்பாடுகள் செய்து மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
மேலும், அலுவலகத்தின் நுழைவுவாயில் முன் அனைத்து அலுவலர்கள், மனுதார்கள் உடல் வெப்பநிலை குறித்து பரிசோதனை செய்திட வேண்டும். குறிப்பாக காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி உள்ள நபர்களை அனுமதிக்க கூடாது.
அதுபோன்ற பாதிப்பு இருப்பவர்கள் குறித்து சம்பந்தப்பட்ட வட்டார மருத்துவ அலுவலரிடம் தகவல் தெரிவித்து மருத்துவ உதவி வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.