திண்டுக்கல்: முத்தனம்பட்டி அருகே தனியார் கல்லூரி தாளாளர், கல்லூரி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய விவகாரத்தில், இரண்டாவது நாளாக மாணவர்கள் தொடர்ந்து கல்லூரி வளாகத்திற்குள்ளேயே உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வந்தனர்.
மாவட்ட நிர்வாகம் கல்லூரிக்கு விடுமுறை அளித்தும், வீடுகளுக்குச் செல்ல மறுத்த மாணவ - மாணவிகள் தங்களின் வருங்காலம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கோரிக்கை விடுத்த மாணவ- மாணவிகள்
கல்லூரி நிர்வாகம் வசூலித்த கல்லூரிக் கட்டணத்தை திரும்பப் பெற்றுத்தர வேண்டும், தற்போது மாணவ மாணவிகள் எந்த நிலையில் படிக்கிறார்களோ அதே நிலையில் வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்து தரவேண்டும், சம்பந்தப்பட்ட கல்லூரி தாளாளரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமார் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டார மருத்துவ இயக்குநர் கொண்ட குழு பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் கல்லூரி வளாகத்தில் உள்ள வகுப்பறைகள் ஒன்றன்பின் ஒன்றாக சீல் வைக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கரூரில் பள்ளி மாணவி தற்கொலை: பாலியல் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு