திண்டுக்கல்: கொடைரோடு பகுதியில் ரயில்வே பாலத்தின் அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வெட்டுக்காயங்களுடன் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்ட அம்மையநாயக்கனூர் காவல் துறையினர், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் கொடைரோடு பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில், சந்தேகத்துக்குரிய கார் ஒன்று அம்மையநாயக்கனூரை கடந்து நிலக்கோட்டை சாலையில் சென்றது. அதே கார் மீண்டும் கொடைரோடு சுங்கச்சாவடியையும் கடந்து சுற்றிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சந்தேகமடைந்த காவல் துறையினர் காரின் உரிமையாளரான திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்த முருகன் என்பவரை பிடித்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், கமுதியை சேர்ந்தவர் முருகன். திருப்பூர் மாவட்டம், பல்லடம் மகாலட்சுமி நகரில் வசிக்கும் இவர், அதே பகுதியில் அசைவ உணவகத்தையும் தனியார் ஏசி மதுபான பார் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த பாரில் ஊழியராக தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்த முத்து (32) என்பவர் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் முத்து பாரிலிருந்து நான்காயிரம் ரூபாயைத் திருடிச் சென்றிருக்கிறார். இதனை அறிந்த முருகன் முத்துவிடம் கேட்டபோது, "பணத்தை எடுத்தது நான்தான். முடிந்தால் என்னைப் பிடித்துப் பார்" என கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த முருகன், தனது பாரில் வேலை செய்யும் ஊழியர்களுடன் பல்லடம் பேருந்தில் தப்பிச் செல்ல முயன்ற முத்துவை பிடித்து பாருக்கு அழைத்து வந்துள்ளார்.
அங்கு வைத்து முத்துவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். அப்போது முத்து மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து பதறிய முருகன், முத்துவின் உடலை தனது காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு ஊழியர்களுடன் தனது சொந்த ஊரான கமுதி நோக்கி விரைந்துள்ளார்.