திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் எல்லைக்குள்பட்ட முத்தனம்பட்டி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு ஐந்து நாள் திருவிழா நடைபெற்றது. அப்போது செந்தில்குமார் என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டியதாக, சுரேஷ் குமார் என்பவர் வடமதுரை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதனடிப்படையில், வடமதுரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமலை முத்துச்சாமி, முதல் நிலை காவலர்கள் ரவிச்சந்திரன், பொன்ராம் ஆகியோர் செந்தில்குமாரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்துள்ளனர்.
அப்போது, விசாரணைக் கைதி செந்தில்குமார் உடலில் காயங்களுடன் காவல்நிலையத்தில் உயிரிழந்தார். இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இவ்வழக்கை நீதிபதி சரவணன் விசாரணை செய்து இன்று (ஏப். 27) தீர்ப்பு வழங்கினார். இதில், வடமதுரை சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்த திருமலை முத்துசாமிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், முதல் நிலை காவலர்கள் ரவிச்சந்திரன், பொன்ராம் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பினால், நீதிமன்ற வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதில் இரண்டு வியாபாரிகள் காயங்களுடன் உயிரிழந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வடமதுரை காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதில் கைதி ஒருவர் உயிரிழந்து, பதினோரு ஆண்டுகளுக்குப் பின்பு குற்றவாளிகளாகக் காவல் துறையினர் மீது தீர்ப்பு வழங்கப்பட்டது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது!