திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்துள்ள ஜி.குரும்பபட்டி கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் விடுதலை செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம், இளைஞர் குழு, பொதுமக்கள், சிறுமியின் உறவினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் சக்கரபாணி உள்ளிட்டோர் சிறுமியின் உறவினர்களுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கரூர் எம்பி ஜோதிமணி பேசுகையில், “ஆளும் அதிமுக அரசில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இன்று 12 வயது சிறுமிக்கு நேர்ந்துள்ள இந்த அநீதி, யாராலும் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு துயரச் சம்பவம்.
இதனால் அக்குடும்பத்தினர் படும் வேதனையை, ஒரு பெண்ணாக இந்த வேதனையை என்னால் உணர முடிகிறது. இந்த தீர்ப்பினால் காயமடைந்துள்ள குடும்பத்தினரை எவ்வாறு தீர்ப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை.
இதுபோன்ற வழக்குகளில் விரைவாக நீதி கிடைக்க தனி விரைவு நீதிமன்றங்கள் அமைத்திட வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது இதுபோன்ற குற்றங்களை உடனடியாக விசாரித்து தீர்ப்பு வழங்கிட தனி விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என உறுதியளித்திருந்தார். ஆனால், ஆளும் அதிமுக அரசு இதுவரை அதனை நிறைவேற்றவில்லை.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு நிர்பயா நிதியிலிருந்து வழங்கவேண்டிய நிதியைக்கூட தமிழ்நாடு அரசு சரிவர வழங்குவதில்லை. எனவே உடனடியாக தமிழ்நாடு அரசு இவ்வழக்கில் மேல்முறையீடு செய்திடவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் சக்கரபாணி, “12 வயது சிறுமிக்கு ஏற்பட்டுள்ள கொடூரத்திற்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுக்கும். மேலும், உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதிசெய்திட தமிழ்நாடு அரசு தவறும்பட்சத்தில் திமுக மேல்முறையீடு செய்து நீதி கிடைத்திட போராடும்” எனத் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் அரசியல் தலைவர்கள் இந்நிலையில், இதுகுறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “திண்டுக்கல்லில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.
உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட் இறந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க தமிழ்நாடு அரசே மேல்முறையீடு செய்து குற்றவாளிக்கு உரிய தண்டனை வாங்கித்தர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு நீதிகேட்டு கடையடைப்புப் போராட்டம் நடத்திய முடித்திருத்துவோர் சங்கம்!