திண்டுக்கல்:பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் நோக்கி இன்று காலை பாலக்காடு - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. இந்த ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் பயணம் செய்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கையில் துப்பாக்கியுடன் இருந்துள்ளனர். அந்த நான்கு இளைஞர்களும், துப்பாக்கியை ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி கையில் வைத்து சுடுவது போல் பாவனை காட்டுவதும், சினிமாவில் வருவது போல் துப்பாக்கியை பாகங்களாக பிரித்து புல்லட் நிரப்பி திரும்பவும் அதை சரி செய்து சுடுவது போல் பாவனை காட்டுவதுமாக இருந்துள்ளனர்.
இதனைக் கண்ட சக பயணிகள், உடனடியாக உதவி மையத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதனைத் தொடர்ந்து கொடைரோடு ரயில் நிலையத்தில் ரயில் வரும் பாதையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும், அந்த இளைஞர்கள் பயணம் செய்த அந்தப் பெட்டியை காவல் துறையினர் சுற்றி வளைத்து நான்கு பேரையும் மடக்கிப் பிடித்து, அவர்களிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அந்த துப்பாக்கியை சோதனை செய்ததில், அது டம்மி துப்பாக்கி என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர்கள் எதற்காக துப்பாக்கியை கையில் வைத்திருந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அமீன்ஷெரீப்(19),கண்ணூரைச் சேர்ந்த அப்துல் ராசிக்(24), பாலக்காட்டைச் சேர்ந்த ஜப்பல்ஷா(18),மற்றும் காசர்கோட்டைச் சேர்ந்த முகமது சின்னான்(20) என்பதும் அவர்கள் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் சென்ற ரயிலில் மதுரை வரை சென்று மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவிற்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.