ஆளுநர் ரவிக்கு சிறப்பு வரவேற்பு அளித்த காவல் துறை திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அட்டுவம்பட்டி பகுதியில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் நாளை (மே 15) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடல் செய்ய இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட இருக்கிறார். தொடர்ந்து அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (மே 14) சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்து, அங்கிருந்து வாகனத்தில் கொடைக்கானல் சென்றார்.
ஆளுநரின் வருகையைத் தொடர்ந்து கொடைக்கானல் வத்தலகுண்டு சாலையில் வாகனங்களின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாயுடுபுரம் பகுதியில் அமைந்துள்ள கோகினூர் விருந்திநர் மாளிகையில் அவருக்கு காவல் துறையினரின் சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது. கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:பழனியில் ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்புக் கொடி - திராவிடர் விடுதலைக் கழகத்தினர் கைது