திண்டுக்கல்:கோவை மாவட்டம் மருதமலை பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 38வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். கடந்த ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்து பல சர்ச்சைகள் உருவாகிய நிலையில், தற்போது ஆளுநர் ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, நேற்று மாலை கோவையில் இருந்து காரில் பழனி முருகன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக சென்றார். பின்னர் பழனியில் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த பழனியாண்டவரை தரிசனம் செய்த ஆளுநர், தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்து, மீண்டும் கோவைக்கு திரும்பிச் சென்றார். ஆளுநரின் பழனி வருகைக்காக சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
இந்த நிகழ்விற்கு முன்னதாக தமிழ்நாட்டில் ஆளுநர் வருகைக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. அதாவது, தமிழ்நாட்டில் ஆளுநர் மீது எதற்காக இவ்வளவு எதிர்ப்பு என்றால், நீட் தேர்வுக்கு எதிராக அனுப்பப்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பியது, பாஜகவிற்கு ஆதரவாக இருப்பதுமே காரணம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், பழனிக்கு வருகை தந்து மலை மீது உள்ள முருகனை தரிசனம் செய்ய இருந்த ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் கட்சியினர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதாவது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்து நிறைவேற்றி அனுப்பிய நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல தீர்மானங்களை கிடப்பில் போட்டுள்ளதாகவும், தமிழக நலம் சார்ந்த அரசியலுக்கும், திட்டங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் அதனைக் கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் "ஆளுநரே திரும்பிப் போ" என போராட்டம் நடத்தப்பட்டது.
பல்வேறு அரசியல் தரப்பினர் ஆளுநருக்கு எதிராக பல செயல்களைச் செய்தனர். குறிப்பாக, திமுகவினர் சார்பில் "கெட் அவுட் ஆர்.என்.ரவி" என தபால்காரர் உருவத்தில் சித்தரிப்பு செய்து ஊர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, ஆளுநர் வருகையைக் கண்டித்து பழனி நகரில் நடைபெற்ற போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்ய வாகனங்களைக் கொண்டு வந்தனர். ஆனால், அவர்கள் கைதாக மறுத்த காரணத்தால், போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்றனர். அதேபோல, ஆளுநரை வரவேற்க தேசியக்கொடியுடன் வந்திருந்த பாஜகவினருக்கும் அனுமதி இல்லாத காரணத்தால், அவர்களையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றியது குறிப்பிடத்தக்கது.
மேலும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜை டிஎஸ்பி சரவணன் கைது செய்ய இழுத்துச் சென்றபோது, பாஜகவினர் டிஎஸ்பி சரவணன் தாக்கினார்கள். அதனால் காவல்துறையினருக்கும், அங்கிருந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பழனியில் தங்கத்தேர் இழுத்து சாமி தரிசனம் செய்த ஆளுநர் ரவி!