திண்டுக்கல்: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இதில், ஜாமீனில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சியினரும், முக்கிய பிரமுகர்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். அதேசமயம், பேரறிவாளனின் விடுதலை உத்தரவிற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முக்கியமாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் உள்ள முக்கியமான இடங்களில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு ‘வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது’ என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு அறப்போராட்டத்தில் ஈடுபட வேண்டுமெனவும் கே.எஸ்.அழகிரி அறிவித்தார். இதன் அடிப்படையில், இன்று காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களிலும் வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக் கொண்டு பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.