திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனுமந்தராயன்கோட்டை, மயிலாப்பூர், வீரக்கல், புதுப்பட்டி, சாமியார்பட்டி, கும்மம்பட்டி, பொன்மான் துறை, வக்கம்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீரின்றி சிரமம் அடைந்து வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணமாக உள்ள நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள மூன்று அடி தடுப்புச்சுவரை குறைக்க வலியுறுத்தி, அனுமந்தராயன்கோட்டை கிராமப் பேருந்து நிலையம் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து நம்மிடையே பேசிய கிராம மக்கள், " கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் இன்றி தவித்து வருகின்றோம். முதலில் மழை இல்லாததன் காரணமாகவே தண்ணீர் வரவில்லை என்று நினைத்திருந்தோம். ஆனால், எங்கள் பகுதிக்கு வர வேண்டிய தண்ணீரை தடுப்பணையின் மூலம் தடுத்து வருகின்றனர். அதனால் எங்களுக்கான தண்ணீர் கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவோம். மேலும் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க உள்ளோம்" என்று கூறினர்.
முன்னதாக முதல் இரண்டு நாட்களில் வட்டாட்சியர், டிஆர்ஓ உள்ளிட்ட அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.