திண்டுக்கல்: கொடைக்கானலுக்கு வரும் கேரள மாநில சுற்றுலா பயணிகளுக்கு தமிழக சுகாதாரத்துறையினர், நிபா வைரஸ் குறித்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கேரள மாநிலத்தில் தற்போது நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் கிருமி தாக்குதல் காரணமாக இரண்டு நபர்கள் பலியான நிலையில் சுமார் 757 நபர்களுக்கு வைரஸ் தாக்குதலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நிபா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக கேரள எல்லைப்பகுதியில் சுகாதாரத் துறையினர் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் நிலவும் இதமான கால நிலையை அனுபவிப்பதற்கும், சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிப்பதற்கும் கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
இதையும் படிங்க:விநாயகர் சதுர்த்தி எதிரொலி : தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்..!
தொடர்ந்து, தமிழக கேரளா உள்ளிட்ட எல்லை பகுதிகளில் தீவிர பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சி நுழைவு வாயில் பகுதியில் தமிழக சுகாதாரத்துறையினர், கேரள மாநில வாகனங்களை பரிசோதனை செய்து போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேலும், இதற்காக ஒரு தனி குழுவை ஏற்படுத்தி கேரள மாநில சுற்றுலா பயணிகளுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என பரிசோதனை செய்து அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திற்கும், சுகாதாரத்துறைக்கும் கோரிக்கை விடுத்து உள்ளனர். கொடைக்கானல் மலை பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க:நிபா வைரஸ் பரவல்..! தேனி, போடி மெட்டு பகுதியில் சுகாதாரத் துறையினர் தீவிர பரிசோதனை!