திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள ரயில் நிலையத்திற்கு சென்னை, கோவை, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு, திருச்செந்தூர், ஆகிய ஊர்களில் இருந்து ரயில்கள் வந்து செல்கின்றன. தற்போது கோடை விடுமுறை என்பதால் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில் இன்று (மே 28) காலை 7.40-க்கு வரவேண்டிய பாலக்காடு- திருச்செந்தூர் பயணிகள் ரயில் இருபது நிமிடம் தாமதமாக வந்து சேர்ந்தது. பழனி ரயில் நிலையத்தில் இரண்டு நிமிடம் மட்டுமே நின்று புறப்படவேண்டிய பயணிகள் ரயில் நீண்டநேரம் புறப்படாமல் நின்றுகொண்டே இருந்தது. பின் இரண்டு மணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.
இது குறித்து பழனி ரயில்நிலைய அலுவலர் முத்துசாமி தெரிவித்ததாவது, பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில் பழனி வந்தடைந்தவுடன் ரயில் கிளம்புவதற்கு கிடைக்கவேண்டிய சமிக்ஞை கிடைக்கவில்லை.
தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஏற்பட்ட சமிக்ஞை பிரச்னையால் ரயில் இன்ஜின் ஓட்டுநர் ரயிலை இயக்க மறுத்துவிட்டார்.
தற்போது வரை சமிக்ஞை கிடைக்காததால் பயணிகளின் நலன்கருதி ரயில்நிலைய அலுவலரின் சுயபொறுப்பில் ரயிலை இயக்க இன்ஜின் ஓட்டுநர் சம்மதித்து இரண்டுமணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டது. இந்த பயணிகள் ரயில் தற்போது மதுரை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் எவ்வித குளறுபடியும் இன்றி சென்று சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.