திண்டுக்கல்:ஒரு ரூபாய் நோட்டிற்கு, பார்சல் பிரியாணி கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை அடுத்து, பொதுமக்கள் உணவகம் வாசலில் படையெடுத்து நின்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. சிறுமலைப் பிரிவு நத்தம் சாலையில், எஃப்.எஸ். பாபு உணவகம் நேற்று (ஆகஸ்ட் 25) திறக்கப்பட்டது.
இந்தத் திறப்பு விழாவை முன்னிட்டு பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு ஒரு பார்சல் பிரியாணி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதலில் வரும் 100 நபர்களுக்கு மட்டும்தான் இந்தச் சலுகை அளிக்கப்படும் என உணவக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையறிந்த பொதுமக்கள் உணவகத்திற்குப் படையெடுத்துச் சென்றனர்.
முறைப்படி அனைவரும் வரிசையில் நிற்கவைக்கப்பட்டு, டோக்கன் வழங்கப்பட்டது. தொடர்ந்து முதலில் டோக்கன் பெற்ற 100 நபர்களுக்கு மட்டும் ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்பட்டது.
சேமிப்பு குறித்து விழிப்புணர்வு
இது குறித்து நம்மிடம் பேசிய கடை ஊழியர் சபீர் அகமது, "எங்கள் முதல் கிளை பேகம்பூரிலும், இரண்டாவது கிளை தொடர்வண்டி நிலையத்திலும் உள்ளது. தற்போது மூன்றாவதாக இந்தக் கிளையைத் தொடங்கியுள்ளோம்.
பொதுமக்களிடத்தில் சேமிப்பின் அவசியத்தை உணர்த்துவதற்காகவும், பழைய ரூபாய் நோட்டுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும், பழைய ஒரு ரூபாய் நோட்டிற்குப் பிரியாணி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தோம்.
முதலில் வரும் 100 நபர்களுக்கு மட்டுமே, இந்தச் சலுகை என்பதையும் கூறியிருந்தோம். அதேபோல முதலில் வந்த 100 நபர்களுக்கு ஒரு ரூபாய் நோட்டுக்கு ஒரு பார்சல் பிரியாணி கொடுத்தோம்.
பொதுவாக அரை பிளேட் பிரியாணி ரூ.70-க்கும், முழு பிளேட் (முட்டை, சிக்கன் 65 உடன்) ரூ.100-க்கும் விற்றுவருகிறோம். ஆம்பூர் பிரியாணியே எங்கள் உணவகத்தின் பிரதான உணவு வகை" என்று கூறினார்.
பழைய நோட்டுகளின் மதிப்பு
சுதந்திரத்திற்கு முன்னர் அச்சிடப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்தின் மதிப்பு இரண்டு லட்சம் வரை சந்தையில் விலை போகிறது. இதில் விக்டோரியா மகாராணியின் படம் அச்சிடப்பட்டிருக்கும். 1918ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசர் கிங் ஜார்ஜ் படத்துடன் கூடிய ஒரு ரூபாய் நாணயத்தின் மதிப்பு ஒன்பது லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உங்களிடம் பழைய ஐந்து ரூபாய் நோட்டு இருந்தால் அதைக் கொடுத்து ரூ.30,000 வரையில் சம்பாதிக்கலாம். முக்கியமாக இந்த ரூபாய் நோட்டில் டிராக்டர் படம் இருக்க வேண்டும். அதேபோல, இதில் 786 என்ற சீரியல் நம்பர் (தொடர் எண்) இருக்க வேண்டும்.
உங்களிடம் 1977- 1979 காலக்கட்டத்தில் அச்சடிக்கப்பட்ட ஒரு ரூபாய் பணம் இருந்தால் நீங்கள் 45 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். வைஷ்ணோ தேவியின் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய், 10 ரூபாய் நாணயங்கள் இருந்தால் அதைக் கொடுத்து 1.5 லட்சம் ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம்.
காயின் பஜார்
காயின் பஜார் (CoinBazzar) தளத்தில் அதனை விற்க, முதலில் இணையவழி விற்பனையாளராகப் பதிவுசெய்ய வேண்டும். நாணயத்தின் புகைப்படத்தைக் கிளிக் செய்து தளத்தில் பதிவேற்றவும். இதற்குப் பிறகு, உங்கள் முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரியை வழங்க வேண்டும். வலைதளம், உங்கள் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்த்துப் பதிவுசெய்யவும்.
இதன்பின்னர் இந்தப் பழைய நாணயங்களை வாங்குபவர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள். உங்களுக்கு வாய்ப்புகள் கூடியிருந்தால் லட்சங்களுக்கு விற்கலாம். அந்த வலைதளத்தின் கட்டணம், விற்பனை விதிமுறைகளின்படி நீங்கள் உங்கள் நாணயத்தை விற்கலாம்.
ஒரு ரூபாய்க்கு பிரியாணி வாங்கிச் சென்ற மக்கள்