கொடைக்கானல்: தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கொடைக்கானலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாடு அரசிடம் கள்ளுக்கு, கள்ளு கடைகளை திறக்க அனுமதி கோருவது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானவை. இவை இரண்டுமே புரிதல் இன்மையின் வெளிப்பாடு ஆகும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி நடைமுறைக்கு வந்த அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை தான் கள் இறக்குவதும், பருகுவதும் என்று கூறினார். கலப்படத்தை காரணம் காட்டி தமிழக அரசு அநியாயமாக அந்த சட்டத்தை பறித்துக் கொண்டதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், பாண்டிச்சேரி, கேரளா, தெலுங்கானா ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் எங்கும் கள்ளுக்கு தடை கிடையாது என்றும், அங்கு கலப்படம் செய்பவர்களை தடுக்கும் அந்த மாநில அரசுகள் மத்தியில் தமிழ்நாட்டில் மட்டும் கலப்படத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், தமிழ்நாடு அரசு ஆளுமை இல்லாத அரசா? ஆளுமை இல்லாமல் போனால் ஏன் ஆட்சியிலேயே இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
ஆளுமை இல்லாத முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும், கள் கலப்படத்தை கட்டுப்படுத்த கூடிய ஆளுமை கொண்டவர் முதலமைச்சராக வரட்டும் எனவும் தெரிவித்தார். அதனையடுத்து ஜனவரி 21ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.