பழனி முருகன் கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திர திருவிழா. பங்குனி உத்திர திருவிழாவின்போது தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலிருந்தும் பக்தர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு சென்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்துக்கொண்டு பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது வழக்கம்.
பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். பால் காவடி, மயில் காவடி, இளநீர் காவடி என பலவகையான காவடிகளை சுமந்துவந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா வருகின்ற 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருந்தது.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கோயில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டன. பழனி முருகன் கோயில் இணை ஆணையர் ஜெயசந்திரபானு ரெட்டி இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.