திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலுக்கு வழிபாடு நடத்துவதற்காகவும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காகவும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளிமாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வருவது வழக்கம்.
அப்படி நேர்த்திக்கடன் செலுத்த வருவோர்கள் கிரிவலப்பாதையில் உருண்டு கொடுத்தல், மொட்டை அடித்தல், காவடி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்து வருகின்றனர். பழனி மலையடிவாரத்தில் உள்ள ஊர் மக்கள் பெரும்பாலும் திருவிழா காலங்கள் மற்றும் கோவில் விசேஷ நாட்களில் வரும் கூட்டத்தை வைத்தே தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு ஏராளமான திருநங்கைகளும் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பழனி பேருந்து நிலையம் மற்றும் அடிவாரப் பகுதிகளில், பக்தர்களிடம் வலுக்கட்டாயமாகப் பணம் வசூலிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பக்தர்களிடம் திருநங்கைகள் கட்டாய வசூல் செய்வதாகவும், சில நேரங்களில் பக்தர்களிடம் இருந்தும் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு சென்று விடுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து பழனி டிஎஸ்பி சத்யராஜ் தலைமையில் திருநங்கைகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் திருநங்கைகளின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.