திண்டுக்கல்: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், திருஆவினன்குடி பெரியநாயகி அம்மன் கோயில், மாரியம்மன் கோயில் உள்ளிட்ட ஏழு கோயில்களில் நடைபெறும் நித்ய பூஜைகளுக்காக நாதஸ்வரம், தவில் இசைக்கருவிகளை வாசிக்கும் பணிக்காக தற்காலிக இசைக்கலைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு ரூ.200 ஊதியத்தில் தினக்கூலி அடிப்படையில் 19 பேர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், பழனி பெரியநாயகி அம்மன் கோயில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் நெய்க்காரப்பட்டி முருகேசன் என்பவர், கோயிலில் பணிபுரியும் இசைக்கலைஞர்கள் நாளை (அக். 10) முதல் பணிக்கு வரவேண்டாம் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இசைப் பள்ளியில் பயின்றோர்
இதையடுத்து, இசைக்கலைஞர்கள் அனைவரும் பழனி திருக்கோயில் தலைமை அலுவலகம் முன்பு தவில், நாதஸ்வரங்களை வாசித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது, "கடந்த இரண்டு ஆண்டுகளாக நாதஸ்வரம், தவில் வாசித்து வருகிறோம்.
பழனி திருக்கோயிலில் உள்ள இசைப்பள்ளியில் பயின்று, பயிற்சி பெற்று, தேர்ந்தெடுக்கப்பட்டு பணிபுரிந்து வந்த நிலையில், நாளை முதல் பணிக்கு வர வேண்டாம் என்றும், இசைப்பள்ளியில் பயிற்சி எடுக்கும் மாணவர்களை வைத்து வாசித்து கொள்வதாகவும் கோயில் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
கலைஞர்களிடையே குழப்பம்
மேலும், பழனி கோயில் இணை ஆணையர்தான் இந்த உத்தரவை பிறப்பித்ததாகவும் கூறி எங்களை வெளியேற்றினார். பழனி திருக்கோயில் இசை வாசிக்கும் அனைவரும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பதால் இனி, வெளியே சென்று கோயில்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புகளும் எங்களுக்கு இல்லை. இதனால் எங்களது குடும்பம் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தனர்.
இசைக் கலைஞர்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த பழனி கோயில் இணை ஆணையர் நடராஜன் பணியாளர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, உங்களை யாரும் கோயிலில் இருந்து வெளியேறச் சொல்லவில்லை. நீங்கள் தொடர்ந்து கோயில்களில் பணி புரியலாம் என்று தெரிவித்ததை அடுத்து, இசைக் கலைஞர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் கோயில் கண்காணிப்பாளர் இசைக்கலைஞர்களை வெளியேற்றியதும், கோயில் இணை ஆணையர் பணியைத் தொடர சொன்னதும் இசைக்கலைஞர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சரிந்த உருளைக்கிழங்கு விலை- வேதனையில் விவசாயிகள்