திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோயில் உண்டியலில் செலுத்துவர். இந்த உண்டியல் நிரம்பிய பின்னர் அதிலுள்ள பணம், நகை உள்ளிட்ட பொருட்கள் கோயில் நிர்வாகம் சார்பில் எண்ணப்படும்.
அந்த வகையில் ஜூலை 26, 27 ஆகிய நாள்களில் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் முதல் நாளில் 2 கோடியே 16 லட்சத்து 86 ஆயிரத்து 240 ரூபாயும், 2ஆவது நாளான நேற்று (ஜூலை 27) 75 லட்சத்து 40 ஆயிரத்து 75 ரூபாயும் வருவாயாக கிடைத்தது. இதன்படி மொத்தமாக 2 கோடியே 92 லட்சத்து 26 ஆயிரத்து 315 ரூபாயும், தங்கம் 1,212 கிராமும், வெள்ளி 18 கிலோ 866கிராமும் மற்றும் வெளிநாட்டு கரன்சி 1.485-ம் காணிக்கையாக கிடைத்தது.