திண்டுக்கல்:ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் நாட்டில் ஏராளமான இந்திய மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில் போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக அறிந்த உடனே இந்திய மாணவர்களை நாடு திரும்புமாறு இந்திய அரசு அறிவுறுத்தியது.
இருப்பினும் பல மாணவர்கள் நாடு திரும்பாமல் உக்ரைனிலேயே தங்கினர்.இந்நிலையில் கடந்த 3 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால் இந்திய மாணவர்கள் அனைவரும் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருபவர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஜோதியானந்தன்-சரஸ்வதி தம்பதியரின் மகன் கோகுல் என்பவர் உக்ரைன் நாட்டிலிருந்து நேற்று (பிப். 25)சொந்த ஊர் திரும்பியுள்ளார். இதனால் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கோகுல் தெரிவித்ததாவது,
உக்ரைனிலிருந்து ஊருக்கு வந்த மருத்துவ மாணவர் “உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் சூழல் உள்ளது. எனவே உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்பவேண்டும் என இந்திய அரசாங்கம் அறிவித்த அன்றே விமானத்தில் முன்பதிவு செய்து ஊர் திரும்ப முடிவு எடுத்தேன். அதன்படி கடந்த புதன்கிழமை இரவு விமானம் மூலமாகப் புறப்பட்டு வியாழக்கிழமை சென்னை வந்து வெள்ளிக் கிழமை பழனி வந்தடைந்தேன்" எனத் தெரிவித்தார்.
அங்கு விமானத்தில் ஏறும்போது போர் ஆரம்பிக்காத நிலையில் சென்னையில் விமானத்திலிருந்து இறங்கும்போது போர் ஆரம்பித்து அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும், தன்னுடன் படிக்கும் மற்ற மாணவர்கள் உக்ரைனில் சிக்கி இருப்பது பெரும் கவலையாக உள்ளதாகவும் கூறினார். மேலும், மற்ற மாணவர்கள் இந்தியா வருவதற்கு முன்பதிவு செய்திருந்த நிலையில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், மாணவர்களை விரைவில் மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:உக்ரைன் மீதான போரை தடுக்க உலக நாடுகள் முயற்சி..