பழனி பஞ்சாமிர்தம் திடீரென விலை உயர்வு! திண்டுக்கல்:பழனி முருகன் கோயிலில் எந்தவித முன்னறிவுப்பும் இல்லாமல் பஞ்சாமிர்தம் விலை உயர்த்தியதாக பக்தர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனி முருகனை காண வருகின்றனர்.
பழனி முருகன் கோயிலில் பிரசித்தி பெற்ற பிரசாதமாக பஞ்சாமிர்தம் விளங்குகிறது. மேலும் பழனி கோயிலுக்கு பஞ்சாமிர்தம் விற்பனை மிக முக்கிய வருவாயாகவும் கருதப்படுகிறது. மலைவாழை, கற்கண்டு, நெய், கரும்புசர்க்கரை, தேன் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சுவை மிகுந்ததாக தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் உள் மற்றும் வெளிமாநில பக்தர்களால் அதிக அளவில் விரும்பி வாங்கப்படுகிறது. மேலும், சிறப்பு மிக்க பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.
விலை உயர்வு:பஞ்சாமிர்தத்தை கோயில் நிர்வாகம் சார்பில் மலைக்கோயில், கிரிவீதி, பேருந்து நிலையம் போன்ற இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. 455 கிராம் நிகர எடை கொண்ட பஞ்சாமிர்தம் பிளாஸ்டிக் டப்பா 35 ரூபாய்க்கும், டின் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று (செப். 17) முதல் பஞ்சாமிர்தம் விலை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென விலை உயர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:நிபா வைரஸ் பரவல்: கேரள பயணிகளிடம் தீவிர சோதனை! கொட்டும் மழையிலும் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு பணி தீவிரம்!
இதன்படி, பஞ்சாமிர்த டப்பா மற்றும் டின் வகைகளுக்கு தலா 5 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 455 கிராம் எடை கொண்ட பஞ்சாமிர்த பிளாஸ்டிக் டப்பா 35 ரூபாய்க்கும், டின் 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பழனி முருகனின் அருட்பிரசாதமான பஞ்சாமிர்த விற்பனையை திருக்கோவில் நிர்வாகம் சேவையாக பார்க்காமல் லாப நோக்கத்தில் செயல்படுவதாக பக்தர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க:விநாயகர் சதுர்த்தி எதிரொலி : வாழை இலை கிடுகிடு விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?