தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோலாகலமாக நடைபெற்ற பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா - latest tamil news

பழனி முருகன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா
பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா

By

Published : Jan 27, 2023, 12:37 PM IST

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா

திண்டுக்கல்: முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலை கோயிலில் குடமுழுக்கு விழா இன்று (ஜனவரி 27) வெகு விமர்சையாக நடைபெற்றது. பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த குடமுழுக்கு விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

குடமுழுக்கு விழாவிற்காக 23ஆம் தேதி மலை மீது 90 யாகசாலை அமைக்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க எட்டு கால பூஜை நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, நூற்றுக்கும் மேற்பட்ட ஓதுவார்கள் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் , கந்தன் அலங்காரம் என முருக கடவுளை போற்றிபாட தமிழில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

முன்னதாக கங்கை, காவிரி, சண்முகநதி என பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. அதனை சிவாச்சாரியார்கள் ராஜகோபுரம் மற்றும் தங்க கோபுரம் பரிவார தெய்வங்கள் சன்னதிகள் மேல் கொண்டு சென்று, கலசங்களில் ஊற்றி குடமுழுக்கு நடத்தி வைத்தனர்.

அதிகாலை 5 மணி முதல் சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் வேத மந்திரங்கள் ஓத காலை 8:15 மணி முதல் 9:15 மணிக்குள்ளாக குடமுழுக்கு விழா நடைபெற்றது. குடமுழுக்கு விழாவை ஒட்டி ராஜகோபுரம் மற்றும் தங்க கோபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவப்பட்டது. அதனை தொடர்ந்து குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது, புனித நீர் படும் வகையில் தண்ணீர் பீச்சும் கருவிகள் மூலமாக புனித நீர் தெளிக்கப்பட்டது.

ராஜகோபுரம் மற்றும் தங்க கோபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவப்பட்டது

குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ளும் இரண்டு லட்சம் பக்தர்களுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்படுகிறது. குடமுழுக்கு விழா முடிந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய மலை அடிவாரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து வருகின்றனர். பக்தர்களை மலை மீது அனுப்பி விரைவாக சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளதால், தென் மண்டல ஐஜி அஸ்லாக்கார்க் தலைமையில் 3,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் கூட்ட நெரிசலை கண்காணிக்கும் வகையில் ஹெலிகேம் பறக்க விடப்பட்டு காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடமுழுக்கு விழாவிற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புறவழிச் சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு புளியம்பட்டி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் நிற்கக் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பழனி குடமுழுக்கு விழா

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவிற்காக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 15 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு மலை மீதும் படிப்பாதையில் உள்ள கோபுரங்கள், மண்டபங்கள் புனரமைப்பு பணி செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு பகலாக வேலை செய்து மலர் அலங்காரம் செய்துள்ளனர். இந்த குடமுழுக்கு விழாவில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:19 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பச்சையம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

ABOUT THE AUTHOR

...view details