திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று (ஜனவரி 27) தொடங்கி நடந்துவருகிறது. இந்த கும்பாபிஷேகத்திற்கான யாக பூஜைகள் அதிகாலை முதலே தொடங்கின. முருகனின் அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோயில் புகழ்பெற்றது. இந்த கோயிலின் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
2018ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. அதன்பின் கும்பாபிஷேகம் நடத்த வேண்டி பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. அதைத்தொடர்ந்து கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. ஜனவரி 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்துவந்த நிலையில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கும்பாபிஷேகம் நடைபெறும்போது கோயில் வளாகம் மற்றும் ராஜகோபுரத்திற்கு மலர்த்தூவ ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது. 2 நாள்களுக்கு முன்னதாகவே யாகசாலை பூஜைகள் தொடங்கின. அந்த வகையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு 8ஆம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின.
7.15 மணிக்கு பெருநிறை வேள்வி, தீபாராதனை, கட்டியம், கந்தபுராணம், திருமுறைகள் தொடங்குகின்றன. அதன்பின் 8.15 மணிக்கு யாகசாலையில் இருந்து சக்தி கலசங்கள் புறப்பாடுகின்றன. அதன்பின் 9.30 மணிக்குள் ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு தீர்த்தம் அபிசேகம் நடத்தப்பட்டு, தொடர்ந்து மூலவருக்கு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.