திண்டுக்கல்: தமிழ்நாட்டில் உள்ள ஆன்மிகத் தலங்களில் முக்கியமானதாகவும், முருகப் பெருமானின் மூன்றாம்படை வீடாகவும் உள்ளது பழநி முருகன் கோயில்.
இங்குத் திருவிழா மட்டுமல்லாது நாள்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகைதருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாகப் பணம், தங்கம், வெள்ளிப் பொருள்களை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதில் உள்ள பணம் கோயில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டுவருகிறது. அதன்படி கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. தொடர்ந்து 56 நாள்களுக்குப் பிறகு பழநி மலைக்கோயிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
பங்குனி உத்திரத் திருவிழாவுக்குப் பின்னர் நடைபெற்ற இந்த உண்டியல் காணிக்கை எண்ணிக்கை மூலம் இரண்டு கோடியே 82 லட்சத்து 87 ஆயிரத்து 560 ரூபாயும், ஆயிரத்து 172 கிராம் தங்கமும், 23 ஆயிரத்து 645 கிராம் வெள்ளியும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 148-உம் கிடைத்தன.
உண்டியல் எண்ணும் பணியில் அறங்காவலர் குழுத் தலைவர் அப்புகுட்டி, இணை ஆணையர் கிராந்தி குமார் ஆகியோருடன் பழநி பகுதியில் உள்ள வங்கி அலுவலர்கள், கோயில் ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பழநி முருகன் கோயிலில் 2.82 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை இந்தப் பணி இன்னும் இரண்டு நாள்களுக்கு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.