திண்டுக்கல்: உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவர். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக உண்டியல்களில் செலுத்துவர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் கோயில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டும்.
அந்த வகையில், கடந்த 24ஆம் தேதி அன்று பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது. இதில் கோயில் அலுவலர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர்.
முதல் நாள் உண்டியல் காணிக்கை மூலம் 2 கோடியே 9 லட்சத்து 73 ஆயிரத்து 925 ரூபாய் வருவாயாக கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 300 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்கச் சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்கப் பொருட்கள் 840 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 18 கிலோ 125 கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.