திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரன்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பெரியகலையம்புத்தூரில் ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் கமிட்டி சார்பில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டியை பழனி சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதையடுத்து வாடிவாசலிலிருந்து முதல் காளையாக காளியம்மன் கோயிலுக்கு சொந்தமான காளை வெளியேறியது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 600க்கும் மேற்பட்ட காளைகள் வரிசையாக வாடிவாசலிலிருந்து அவிழ்த்துவிடப்பட்டன.
இப்போட்டியில் 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காளைகளை பிடிக்க முற்பட்டனர். 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் வீரர்கள் மாடுபிடிக்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து துள்ளி வந்த காளைகளை வீரர்கள் பாய்ந்து அடக்க முயன்ற காட்சி காண்போரை வியக்கச் செய்தது. இருப்பினும் மாடுகள் முட்டியதில் சில மாடுபிடி வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் பார்வையாளர்கள் மைதானத்திற்குள் புகுந்து விடாதபடி 2 அடுக்கு தடுப்புகள்அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.