தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீனாவில் கிடைத்த தமிழ்மொழி கல்வெட்டு; பழனி சித்தர் எழுதியதாக சான்று! - தமிழ்

திண்டுக்கல்: தமிழ், சீன மொழி எழுத்துக்களுடன் சீனாவில் கிடைத்த கல்வெட்டு, பழநியை சேர்ந்த சித்தர் ஒருவரால் இது எழுதப்பட்டதாக பழனி தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சீனாவில் கிடைத்த தமிழ்மொழி கல்வெட்டு!

By

Published : Jul 6, 2019, 6:34 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி சேர்ந்தவர் நாராயணமூர்த்தி; தொல்லியல் ஆய்வாளர். இவரது வாட்ஸ்அப் குரூப்பில் உலக பல நாடுகளைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் உள்ளனர். இந்த குழுவில் நிறைமதி எனும் தமிழ் பெயர் கூடிய கிகி ஜாங் என்ற தொல்லியல் ஆய்வாளர், புதிதாக கண்டறியப்பட்ட ஒரு கல்வெட்டின் படத்தை அனுப்பி அதற்கு விளக்கம் கேட்டிருந்தார். இதனை ஆராய்ந்த போது பழனியை பகுதியை சேர்ந்த சித்தர் ஒருவரின் கல்வெட்டு என்பது தெரியவந்தது.

இது குறித்து நாராயணமூர்த்தி கூறியதாவது,

சீனர்கள் கண்டறியப்பட்ட கல்வெட்டின் மேல் பகுதியில் தமிழிலும் கீழ் பகுதியில் சீன மொழியிலும் பொறிக்கப்பட்டுள்ளது. இது கிபி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கல்வெட்டில் மூன்று வரிப் பாடல் வடிவில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆசிரியப்பா வகையைச் சேர்ந்த இக்கல்வெட்டு எழுத்துப் பிழைகளுடன் உள்ளது. தொடக்கத்தில் ஹரிஓம் என்று துவங்கும் இப்பாடல், "வைய்ய நீடுக மாமழை மன்னுக மெய் விரும்பிய அன்பர் விளங்குக சய்வதான் தலைத்தோங்குக தெய்வ (வெண்) திருநீறு சிறக்கவே” என்று எழுதப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிடைத்த சில செப்பேடுகளிலும் ஓலைச்சுவடிகளிலும் கூட தொடக்கத்தில் இப்பாடல் வரிகளை எழுதிய பின்பே மற்ற செய்திகளை எழுதும் மரபு இருந்துள்ளது. பழனி பகுதிகளில் கிடைத்த ஓலைச்சுவடிகளிலும் செப்பேடுகளிலும் மிக அதிகளவில் இந்தப் பாடலைக் காண முடிவதால் இப்பாடலின் பிறப்பிடம் பழனியாக இருக்கலாம்.

இந்த கல்வெட்டு தென்கிழக்கு சீனாவில் குவான்சோ என்னும் ஊரில் கிடைத்துள்ளது. இந்த ஊர் பண்டைய சீனாவில் ஒரு பன்னாட்டு துறைமுகப்பட்டினமாகும். இதே இடத்தில்தான் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சீன மொழிகளில் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு கிடைத்தது. அதனை தமிழகத்தைச் சேர்ந்த சித்தர் ஒருவர் பொறித்துள்ளார்.

சம்பந்தபெருமாள் தவசக்கரவர்த்தி என்ற பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. தவசக்கரவர்த்தி என்றால் சித்தர் அல்லது துறவி என்று பொருள் கொள்ளலாம். சீனாவை அடிமைப்படுத்திய மங்கோலியப் பேரரசர் குப்லாய்கான் முதுமை நோய் காரணமாக உடல் நலம் குன்றி இருந்தார். இவர் புகழ்பெற்ற செங்கிஸ்கான் அவர்களின் பேரன் ஆவார். இவர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தை சேர்ந்த சம்பந்தபெருமாள் எனும் சித்தரும் அங்கு வாழ்ந்திருந்தார். இந்த சித்தர் குப்லாய் கான் நலம் பெறவேண்டி அங்கு ஒரு சிறுவன் மூலம் கோயிலை எழுப்பி அதற்கு மன்னரின் பெயரிலேயே ’திருக்கானீஸ்வரம்’ என்று பெயரிட்டுள்ளார்.

இச்செய்தி அங்குள்ள தமிழ் சீனம் மொழிகளில் கிபி 1281 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டு மூலம் தெரியவருகிறது. தற்போது கிடைத்துள்ள கல்வெட்டையும் சித்தர் சம்பந்த பெருமாளே எழுதி இருக்கலாம். தமிழ் கல்வெட்டிற்கு கீழே பொறிக்கப்பட்டுள்ள சீன மொழி கல்வெட்டு பரிசோதித்த போது, துறவி ஒருவர் இக்கோயிலை கட்டி உள்ளனார் என்று அதில் பொறிக்கப்பட்டுள்ளது.

நாராயணமூர்த்தி

பண்டைய தமிழகம் ஆண்ட பல்லவ மற்றும் சோழ அரசுகள் சீனாவுடன் நல்ல தொடர்புகளில் இருந்தன. சீனாவை குப்லாய்கான் ஆண்ட போது தமிழகத்தில் குலசேகர பாண்டியனின் ஆட்சியில் இருந்தது. இரண்டு அரசுகளுக்கும் நல்ல நட்பு இருந்தது. இத்தாலியப் பயணி மார்க்கோபோலோ குப்லாய்கானின் ஆட்சிக்காலத்தில் 20 ஆண்டுகள் வாழ்ந்ததாக சான்றுகள் உள்ளன. சீன பயணத்தை முடித்துக் கொண்ட மார்க்கோபோலோ நேராக தமிழகத்தை நோக்கி பயணப்பட்டார். இந்த பயணம் சித்தர் சம்பந்தப் பெருமானின் அறிவுறுத்தலின்படி நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

பேரரசர் குப்லாய்கான், மார்கோபோலோ, சித்தர் சம்பந்தபெருமாள் ஆகிய மூவரின் புகழ் மிக்க கூட்டணி காலத்தில் தான் இந்த தமிழ் கல்வெட்டு சீனாவில் பொறிக்கப்பட்டுள்ளது. பாண்டிய நாட்டில் அதுவும் குறிப்பாக பழனி பகுதியைச் சேர்ந்த சித்தர் சம்பந்தப் பெருமாள், சீனா சென்று அந்த நாட்டின் அரசின் பெயரில் அங்கு சிவன் கோயிலை கட்டி தமிழ் கல்வெட்டு கொடுத்துள்ளார் என்பது பெருமைக்குரிய செய்தியாகும். ஏற்கனவே பழனியை சேர்ந்த போகர் என்னும் சித்தர், சீனா சென்று ஆலயம் அமைத்து வழிபட்டு நடத்தியதாக குறிப்புகள் பல உள்ளன, என்றார்.

ABOUT THE AUTHOR

...view details