முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து அதிமுகவில் குழப்பமான சூழல் நிலவிவருகிறது. சென்னையில் கடந்த 28ஆம் தேதி நீண்ட நேரம் காரசாரமாக நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, 'அக்டோபர் 7ஆம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பை எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் இணைந்து வெளியிடுவார்கள்’ எனக் குறிப்பிட்டார்.
இதனைத்தொடர்ந்து, அக்டோபர் 6ஆம் தேதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் சென்னைக்கு வரும்படி அக்கட்சியின் தலைமையிலிருந்து தகவல் வெளியானது.
இந்நிலையில், துணை முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், தனது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்துடன் சென்றாயபெருமாள் மலைக்கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு நகரில் உள்ள மலைமீது சென்றாயபெருமாள் கோயில் உள்ளது. புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை இந்தக் கோயிலில் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஓ.பன்னீர்செல்வம் வத்தலக்குண்டு சென்றாய பெருமாள் மலைக்கோயிலில் சிறப்பு வழிபாடு விஷேசமாக 16 வகையான ஆராதனைகளுடன் சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த வழிபாட்டில் சென்றாய பெருமாள் முன்னிலையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார், ஓ.பன்னீர்செல்வம். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ள அமைச்சர்கள் கூட்டத்தை புறக்கணித்து புதன்கிழமை வரை முழுமையான தியானத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபடப் போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் தேனி மாவட்டம், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பிரசத்தி பெற்ற பழமையான திருக்கோயில்களில் சிறப்பு வழிபாட்டிற்கு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிகிறது. பரபரப்பான அரசியல் சூழலில் துணை முதலமைச்சரின் இறை வழிபாடு புதிய விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.
இதையும் படிங்க: 'திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம்; பயனடைந்த லட்சக்கணக்கான விவசாயிகள்!'