தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் கடன் மோசடி: விசாரணையைத் தீவிரப்படுத்துமா சைபர் க்ரைம்? - ஆன்லைன் லோன் செய்தி

திண்டுக்கல்: இந்தியா முழுவதிலும் தற்போது அதிர்வலையை உண்டாக்கியுள்ள ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் வழங்கும் விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் குறித்த சிறப்புத் தொகுப்பு...

ஆன்லைன் கடன் மோசடி
ஆன்லைன் கடன் மோசடி

By

Published : Jan 7, 2021, 12:51 PM IST

Updated : Jan 11, 2021, 10:07 AM IST

கரோனா பெருந்தொற்றின் காரணமாக பெரும்பாலான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். கரோனாவினால் பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து கண்காணித்து வந்தனர். மேலும் மத்திய அரசு பல்வேறு கட்டங்களாக தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. இந்தச் சூழலில் மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக உண்ண உணவில்லாமல் தவித்து வருகின்றனர்.

பொதுமக்கள் கரோனா ஊரடங்கினால் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் , வாட்ஸ்அப் , இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளின் அடிமையாகிவிட்டனர். மேலும், சமூக வலைதளங்களில் ஆன்லைனில் கடன் வழங்கும் செயலி குறித்த விளம்பரங்கள் அதிகளவில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. ஒரு நிமிடத்தில் 50ஆயிரம் ரூபாய் வரை கடன் பெறலாம் என விளம்பரம் செய்து மக்களைக் கவர்ந்து வருகின்றனர்.

இதனைக் கண்ட பொதுமக்கள் தங்களது குடும்பச் சூழலை சமாளிப்பதற்காக இத்தகைய செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டார் மூலம் பதிவிறக்கம் செய்து, அதில் விண்ணப்பம் செய்கின்றனர். செயலியில் விண்ணப்பிக்க நமது செல்ஃபோன் எண்ணைப் பதிவு செய்த பிறகு வரும் ஓடிபி-யை, அதில் பதிவு செய்தால் செயலியின் முகப்பிற்குச் செல்லும். இதையடுத்து, தங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் தருவதுபோல முகப்பில் காண்பித்து, காண்போரை ஆசை என்னும் வலையில் விழ வைத்து விடுகின்றனர்.

செயலி குறித்த விவரங்கள்:

இதையடுத்து, கடன் பெறும் விருப்பத்தை நாம் கொடுக்கும்போது நமது செல்போனுக்கு தொலைபேசியை அணுகத்தேவையான தொடர்பு எண்கள், போட்டோ கேலரி , லொக்கேஷன் , கேமரா ஆகியவற்றின் அனுமதிக்கான அறிவிப்புகள் வரும். இதனையறியாத மக்கள் பலரும் கடன் வாங்கும் ஆசையில் அதற்கெல்லாம் சரி என கொடுத்துவிடுகின்றனர்.

தொடர்ந்து, நமது ஆதார் அட்டை, பான் கார்டு ஆகியவற்றின் புகைப்படங்களை அனுப்ப வேண்டும். மேலும், செல்ஃபி ஒன்றையும் எடுத்து அவர்களுக்கு அனுப்பவேண்டும். இவையெல்லாம் ஆராய்ந்த பிறகே நமக்கு கடன் கொடுக்க முடிவுசெய்கின்றனர். இவையெல்லாம் முடிந்த பிறகு 3 ஆயிரம் ரூபாய் பணம் எடுப்பதற்கான அமைப்புகள் வந்துவிடும்.

அந்த 3 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு செயலாக்க கட்டணமாக (processing fee) ஆயிரத்து 200 முதல் குறிப்பிட்ட தொகையைப் பிடித்தம் செய்து மீதித்தொகையை நமது வங்கிக் கணக்கில் செலுத்துவர். மேலும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசமாக 7 நாள்கள் மட்டுமே கொடுப்பார்கள். பின்னர், கடன் தொகையைக் கட்டும்போதும் அதிக வட்டியுடன் சேர்ந்து கட்ட வேண்டும்.

பொதுமக்களை மிரட்டும் கும்பல்:

கடனைத் திருப்பிச் செலுத்த ஒரு நாள் தவறும் பட்சத்தில், நமது செல்ஃபோனுக்கு அந்நிறுவனத்தின் வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி வரும். அதில் நமது புகைப்படம், நமது போனிலுள்ள தொடர்பு பட்டியலின் புகைப்படம் ஆகியவற்றை நமது செல்ஃபோனிலிருந்து திருடி, அதனை நமக்கு அனுப்பி, கடனை இன்னும் 5 நிமிடங்களில் கட்ட வேண்டும்.

இல்லையெனில் உங்கள் தொடர்பு பட்டியலிலுள்ள அனைத்து எண்ணிற்கும் தொடர்புகொள்வோம் என மிரட்டுவார்கள்.

தொடர்ந்து அந்த மோசடி கும்பல்கள் ஆபாசமாகப் பேசியும்; தற்கொலை செய்யும் அளவிற்கும் ஆளாக்குவார்கள். இதனால், தற்போது தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் பலர் தற்கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு, தெலங்கானா காவல் துறையினர் குறிப்பிட்ட சில கடன் கொடுக்கும் செயலியை நடத்தி வந்தவர்கள், கால் சென்டரில் வேலை செய்தவர்கள் உள்ளிட்ட சீன நாட்டைச் சேர்ந்தவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இவர்கள் எல்லோருக்கும் மூளையாக இருந்து, பெங்களூருவில் உள்ள கால் சென்டர், அதன் இயக்கங்கள் அனைத்தையுமே சீன நாட்டிலிருந்தபடியே 'ஹாங்க்' என்பவர் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தனர்.

இந்த இயக்கங்கள் அனைத்தையுமே 'டிங் டாங்' என்ற ஒரு செயலி மூலமாக 'ஹாங்க்' தினமும் கண்காணித்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

மன உளைச்சலுக்கு ஆளாகும் மக்கள்:

மேலும் ஆர்.பி.ஐ மற்றும் என்பிஎப்சி அனுமதி பெறாமல் முறைகேடாக அதிக வட்டி வசூலும் செய்து வருகின்றனர். தொடர்ந்து மக்களுக்கு இது போன்ற செயலிகளில் கடன் வாங்க வேண்டாம் எனவும் பொதுமக்களை துன்புறுத்துவோர் மீது சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளிக்கலாம் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கடன் வழங்கும் செயலியைச் சேர்ந்தவர்கள், கடன் வாங்கியவருக்கு தொல்லைத் தருவதைக் குறைத்திருந்தனர். தற்போது மீண்டும் மிரட்டல்களும், குறுஞ்செய்திகளும் அனுப்பி வருகின்றனர். இதனால், கடனில் சிக்கிக் கொண்டவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இது குறித்து ஆன்லைன் மூலம் புகார் தெரிவிக்கப்பட்டதில் முறையான பதிலை ஆர்பிஐ அளிக்காமல் காவல் நிலையத்தை அணுகுங்கள் எனத் தானியங்கி குறுஞ்செய்தி மட்டுமே அனுப்பப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டம் போன்ற செயலிகளை தடை செய்தது போல் இந்தக் கடன் வழங்கும் செயலிகளையம் மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சைபர் க்ரைம் குற்றங்களை விசாரிக்க அனைத்துப் பகுதிகளிலும் காவல் நிலையம் அமைத்து, இது போன்று வரும் புகார்களை உடனே விசாரித்து விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கூறுகையில், 'கரோனா ஊடங்கு நேரத்தில் குடும்பச் சூழ்நிலை காரணமாக ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கினேன். இதைக் கட்டத் தவறியதற்காக என்னை மிக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தித் திட்டனர். மேலும், எனது உறவினர்களுக்கு அழைத்து நான் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்போவதாகவும் அவர்கள் மிரட்டினர். இந்த விவகாரத்தில் என்னைப் போன்று நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடவடிக்கை எடுக்குமா சைபர் க்ரைம்:

ஆன்லைனின் கடன் வாங்கிய யாரும் யாரையும் ஏமாற்றுவதற்காகப் பணம் வாங்கவில்லை. பணம் பற்றாக்குறை, வங்கியில் கடன் தர மறுப்பதால் தான் வேறு வழியின்றி ஆன்லைனில் பணம் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த விவகாரத்தின் மீது அரசு தனிக் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.

இது குறித்து வழக்குரைஞர் சௌந்தர் கூறியதாவது, 'பொதுமக்கள் அனைவரது கைகளிலும் தற்போது செல்ஃபோன் உள்ளது. அதில், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அதில் வரும் விளம்பரங்களைப் பார்த்து ஆன்லைன் மூலமாக அவர்கள் கடன் வாங்குகின்றனர். அதனைக் கட்ட தவறும் பட்சத்தில் அவர்களுக்கு நிறுவனத்தில் இருந்து அழைப்புவிடுத்து தொல்லை கொடுத்து வருகின்றனர். இது குறித்து சைபர் க்ரைம் காவல் துறை நடவடிக்கை எடுத்து விரைவில் தீர்வு கொண்டுவரவேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.

ஆன்லைன் கடன் மோசடி: விசாரணையைத் தீவிரப்படுத்துமா சைபர் க்ரைம்?

மேலும், வழக்குரைஞர் கிசோர் கூறுகையில், 'ஆன்லைன் மூலம் கடன் தருவதாகக் கூறி, மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்தச் செயலிகளில் முதற்கட்டமாக 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் வரை கடன் கொடுக்கின்றனர்.

இந்தச் செயலிகளின் மூலம் இதுவரை 21 ஆயிரம் கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் செயலியின் மூலம் நம்மை அறியாமலேயே நமது தகவல்கள் அனைத்தும் திருடப்படுகிறது. இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு வேண்டும். மத்திய அரசும் இத்தகைய செயலிகளை தடை செய்யவேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: ஆன்லைன் கடன் மோசடி: சிம் கார்டுகள் சப்ளை செய்த நான்கு பேர் கைது!

Last Updated : Jan 11, 2021, 10:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details