கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும்விதமாக தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஒருசில இடங்களில் மதுபானங்களைப் பதுக்கிவைத்த சிலர் கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்பனை செய்துவருகின்றனர்.
தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு காரணமாக மதுபான கடைகள் அடைக்கப்பட்டிருப்பதால் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்குப் பல்வேறு வகைகளில் மதுபானங்கள் கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.
இதை காவல் துறையினர் தடுத்து பல இடங்களில் மது பாட்டில்களைப் பறிமுதல்செய்து-வருகின்றனர். அந்த வகையில் கர்நாடகாவிலிருந்து ரயில்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு மதுபானங்கள் கடத்தப்படுவதாக ரயில்வே காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இன்று கர்நாடக மாநிலத்திலிருந்து தென் மாவட்டங்களுக்குச் சென்ற அனைத்து ரயில்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டபோது பெங்களூருவிலிருந்து தூத்துக்குடிக்குச் சென்ற மைசூரு விரைவு ரயிலின் ஒரு பெட்டியில் பயணிகள் இருக்கைக்கு அடியில் மதுபானங்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்களைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், அந்த ரயில் பெட்டியில் பயணம்செய்த இரண்டு பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர், மேலும் அதே ரயில் பெட்டியில் மதுபானம் கடத்திவந்ததாகச் சந்தேகப்படும் இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து திண்டுக்கல் இருப்புப் பாதை ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்கள் கடத்திவந்தவர்களைத் தேடிவருகின்றனர்.